Tuesday, November 25, 2014

மனோ தைரியம் யாருக்கு அதிகம்? ஆணுக்கா பெண்ணுக்கா?





பெண்மையின் நீயா நானா பகுதியில் நான் முன்வைத்த வாதம் இது! :)


என் தமிழாம் செந்தமிழை வணங்கிக்கொண்டு.... ;) ஹி ஹி ஹி

மனோதைரியம் யாருக்கு அதிகம்?ஆணுக்கா பெண்ணுக்கா இது தான் எங்கள் தலைப்பு!

முதலில் மனோ தைரியம் என்பது என்ன? ஒரு நேர்மையான செயலை செய்து முடிப்பதற்கான உறுதி, வெற்றி அடையும் வரை தொடர்ச்சியான முயற்சியை செய்யக்கூடிய பொறுமை, அந்த செயலின் விளைவை அது நல்லதோ கெட்டதோ, தானே ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வு இத்தனையையும் இணைத்த கூட்டு இயல்பே மனோ தைரியம்! கெட்ட அழிவுக்குரிய செயலை செய்பவனை/ளை மனோதைரியம் மிகுந்தவனாக /ளாக நாம் குறிப்பிடுவதில்லை.

அடுத்ததாக ஆண் பெண் மனோ தைரியத்தை விஞ்ஞானம் எப்படி பார்க்கிறது? சமீபத்திய விஞ்ஞான ஆய்வு முடிவுகள் ஆண் பெண் இருவருக்கும் விஞ்ஞான ரீதியில் உளவியல் சக்தி சரி சமம் அதாவது மிகக்குறைந்த வேறுபாடுகளே உள்ளன என்பதை தெளிவாக நமக்கு தெரிவிக்கின்றன. அதை யார் அதிகம் பயன்படுத்துகிறார்கள் யாருக்கு அந்த தேவை அதிகம் எழுகிறது என்பதை பொறுத்து அங்கே மனோ தைரியம் வெளிப்படுத்தப்படுகிறது! ஆண்களா பெண்களா அப்படி அந்த சக்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்று கேட்டால் நான் பெண்கள் பக்கமே! பெண்கள் தான் ஆண்களை விட மனோ தைரியத்தை கற்பனைக்கெட்டாத அளவில் வெளிப்படுத்துகிறார்கள். காரணம் அவர்களே இந்த உலகில் அதிகம் ஒடுக்கப்படுபவர்கள். ஆண்களுக்கு பொதுவாக இந்த உலகம் சாதகமானதே, ஆகவே அவர்கள் மனோ தைரியத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை பெண்களை போல எழுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லேனா எழுதுகிறார் "அவசியமே ஒரு மனிதனுக்கு ஆற்றலை தருகிறது! அகத்தியர் கடலைகுடித்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அவரால் குடிக்க முடிந்தது. நமக்கும் அந்த அவசியம் ஏற்பட்டால் நாமும் குடித்தே தீருவோம்." அவசியம் இல்லாத இடத்தில் நம்மிடம் ஆற்றலோ சக்தியோ வெளிப்படாது. ஆண்களும் அப்படியே!

சமுதாயக்கட்டமைப்பு பெண்களை நிறைய கட்டுப்பாடுகளுக்குள் அடக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு சிறிய சிறிய செயல்களுக்கும் அவள் போராட வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களை பாருங்கள்! கல்விக்கு கூட உயிர் கொடுக்கும் நிலை பெண்களுக்கு! அங்கிருந்தும் ஒரு மலாலாவுக்கு உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. 

சில குடும்பங்களில் தான் நினைத்ததை சமைப்பதற்கு கூட சில பெண்களுக்கு மனோ தைரியம் தேவைப்படுகிறது காரணம் அவர்களது குடும்ப அமைப்பு அவர்களுக்கு அவ்வளவு சுதந்திரம் தருவதில்லை. ஆண்கள் அப்படியல்ல மக்களே..இந்த சமுதாய அமைப்பு காலம் காலமாக அவர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை கொடுக்கிறது. ஆண்கள் உயிரைக்கொடுத்து என்ன தான் செய்தாலும் சமூகம் அவர்களுக்கு சாதகமாக தான் இருக்கும் அவர்களின் இடத்தில் ஒரு பெண்ணோடு ஒப்பிடும் போது!

லியாண்டர் பயஸ் உம் கஷ்டப்பட்டார். சானியா மிர்சா வும் உழைத்தார். இருவருக்கும் கிடைத்த விமர்சனங்கள் ஒன்றா மக்களே?அவரின் திறமை அடையாளம் காணப்படும் வரை தான் ஒரு ஆண் இற்கு கஷ்டம் இருக்கும். அதன் பின் உலகம் கொண்டாடும். பெண்ணோ திறமையை நிரூபித்த பின்னும் கூட தீக்குளிக்க வேண்டும்!சானியா  அணியும் உடை கூட கலாசாரக்காவலர்களால் கிண்டல் செய்யப்பட்டது!எத்தனை கல்வீச்சுக்கள்! குணத்தை பற்றிய தவறான பரப்புரைகள், இத்தனையும் தாண்டி சாதிப்பதற்கு அந்த பெண் எவ்வளவு மனத்தைரியம் கொண்டவளாயிருக்க வேண்டும்?

ஆனாலும் இத்தனை விடயங்களும் சாதகமாக இந்த பூமியில் ஆண்களுக்கு இருக்கும் போது ஆண்களின் தற்கொலை விகிதம் பெண்களோடு ஒப்பிடும் போது நான்கு மடங்கு அதிகம் என்று புள்ளிவிபரங்கள் பிட்டு வைக்கின்றன. பழைய காலம் என்றால் ஆண்களின் அதிகமான  பொறுப்பு அழுத்தம் என்று சொல்லலாம். இந்த வருடம் அமெரிக்காவில் இது இருபது மடங்கு என்கிறது உறுதிப்படுத்த படாத புள்ளி விபரம்! ஆகவே ஆண்களின் பொறுப்பு வாதம்  இங்கே அடிப்பட்டு போகிறது! தங்களுக்கு அவ்வளவு தூரம் சாதகமற்ற உலகிலும் பெண்கள் மனோதைரியத்தொடு போராடுகிறார்கள் ஆண்கள் போராட்டத்தை கைவிட்டு விரைவிலேயே வாழ்வை முடித்து கொள்கிறார்கள் என்பதற்கு இதை விட சிறந்த ஆதாரம் எதுவுமே இருக்க முடியாது.

நமது காவியங்களிலும் கூட தமயந்தியை விட்டு ஓடிப்போன நளன் இருக்கிறான். அதே நேரம் மனோ தைரியத்தோடு தீக்குளித்த சீதையும் இருக்கிறாள்.

ஆண்களுக்கு குடும்ப பொறுப்பு அதிகம்.பாரத்தை தூக்கி தோளில் சுமக்கிறார்கள். அழாமல் உணர்ச்சிகளை அடக்கி தைரியமாக இருக்கிறார்கள் என்றெல்லாம் வாதிட முடியும். 
குடும்பத்தலைவன் என்று தன்னை வடிவமைத்தது ஆண், அவன் போய் மூட்டை தூக்கினாலும் அந்த சமுதாயம் எதுவும் சொல்லாது. ஒரு பெண் அதை நினைத்து பார்க்க முடியுமா? உடலியல் மனவியல் என்று அந்த பெண்ணுக்கு எத்தனை கஷ்டம் வரும்? அதையும் தாண்டி சில பெண்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

விதவை தாய் குழந்தையோடு தனியே இருக்கிறாள் என்று வையுங்கள். அதே போல ஒரு தந்தை. இருவரும் குழந்தையை ஊர் மெச்ச வளர்கிறார்கள். இதில் யாருக்கு மனோ தைரியம் அதிகம்? அந்த தாய்க்குத்தானே? எத்தனை கழுகுகள் உடல்பசியில் அவளை சுற்றி வட்டமிட்டிருக்கும்? அவளது ஒவ்வொரு நடத்தையும் ஊரால் அலசப்பட்டிருக்கும்? அத்தனையையும் தாண்டி தான் அவள் அந்த குழந்தையை வளர்க்கிறாள். சந்தர்ப்பங்கள் சாதகமாக இருக்கும் போது அங்கே மனோ தைரியத்துக்கு அவசியம் இல்லை மக்களே. இப்போதைய இந்த உலகில் ஆண்களுக்கான சந்தர்ப்பங்களே சாதகமாக இருக்கிறது. அதனாலேயே ஆயிரம் விண்வெளி வீரர்களில் அரிதாக வரும் கல்பனா சாவ்லாக்கள் கொண்டாடப்படுகிறார்கள்!

குடியை பற்றி பலர் விவாதம் செய்தார்கள், அது இந்த விவாதத்தில் நிச்சயம் கருத்தில் எடுக்கப்படவே முடியாதது. குடி என்பது ஒரு போதை. ஆல்கஹோல் மனிதனின் உடலில் நுழைந்தால் அது அவனை அடிமைப்படுத்தி சுயநினைவை மழுங்க வைத்து சகல நாசங்களுக்கும் உட்படுத்தும். அதற்கு ஆண் பெண் பாகுபாடு கிடையாது. 
எம் நாட்டில் ஆண்கள் அதிகம் வெளியே செல்பவர்கள், அத்தோடு சமூக கட்டுப்பாடுகள் என்பவற்றால் பெண்களுக்கு அது அடையப்படாத பொருளாக இருக்கிறது, ஆண்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தும் சந்தர்ப்பம் அமைவதால் அடிமையாகிறார்கள். அவ்வளவே. சில மேல் நாடுகளில் ஆண் பெண் இருவருமே சரி சமமாக குடிப்பார்கள். மது எப்போதுமே சமத்துவமாய் தனது வேலையை பெண் உடலிலும் காட்டும்! இங்கே பெண் ஆணை திருத்துவது என்பதெல்லாம் படு முட்டாள் தனமான வாதம். ஏனெனில் மது ஒரு சமூக பிரச்சனை..ஒரு அடிமைத்தனம், மனோ தைரியத்துக்கும் அதற்கும் அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் உள்ள சம்பந்தம் தான்.

கணவன் மதுவின் அடிமை என்றால் அங்கே மனைவி முதலில் அதை நிறுத்த முயல்வாள். அது முடியாவிட்டால் மேல் நாடுகளில் சுலபமாக பிரிந்து போய் விடுவார்கள். நம் நாடுகளில் என்றால் அந்த பெண்ணை வேலியில்லா பயிராக பல எருமைகள் மேய வரும், அதை தவிர எத்தனை பிரச்சனைகள்? அதற்கு அந்த மது அடிமையின் தொல்லையே பரவாயில்லை என்று குடும்பத்திற்காக தாங்கிக்கொள்ள முயல்வார்கள். அது மனோ தைரியத்தின் உச்சம். அங்கே குழந்தைகளின் கல்வி, குடும்ப பாரம், தன் குடும்பத்தின் பாதுகாப்பு பிறகு கணவனின் துன்புறுத்தல்கள் இத்தனையும் ஒருத்தியாய் அவள் தலையில் விழுகிறது. அத்தனையையும் தாங்கிக்கொள்கிறாள். தன்னால் முடிந்தவரை பிள்ளைகளை ஆளாக்குகிறாள். தன்னுயிரை மாய்த்துக்கொண்டாள் என்று நாம் கேள்விப்பட்டதில்லை! இந்த பெண் எந்த வகையில் கல்பனா சாவ்லாவை விட குறைந்து போய் விட்டாள்? அப்பாக்கள் தற்கொலை செய்யலாம். அம்மா தற்கொலை செய்வது மிகக்குறைவு! 

மாறாக தன் விருப்பத்திற்கு மாறாக குழந்தைகள் திருமணம் செய்தாலோ, மனைவி ஓடிப்போனாலோ கடன் அதிகரித்தாலோ அனைவரையும் நடுரோட்டில் விட்டு தான் மட்டும் பிரச்சனையில் இருந்து உயிரை விட்டு தப்பித்துக்கொள்ளும் தந்தைமாரை நாம் கண்டிருக்கிறோம். பெரும்பாலான ஆண்களுக்கு தூணாக ஒரு தாயோ, மனைவியோ, தோழியோ தேவை. தன்னந்தனியாக ஜெயித்த ஆண்கள் இருக்கிறார்கள் ஆனால் மிகக்குறைவு.அப்படி தன்னந்தனியாக போராடும் சந்தர்ப்பங்களும் அவசியமும் கூட  அவர்களுக்கு குறைவே. ஆனால் தன்னந்தனியாக போராடி ஜெயித்த பெண்களை ஒவ்வொரு தசாப்தத்திலும் கண்டு கொண்டு தான் இருக்கிறோம். 

சின்ன விஷயத்தையும் பெரிது படுத்துகிறார்கள். புரணி பேசுகிறார்கள் என்று குற்றம் சுமத்தாதீர்கள்! நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? நானுமப்படி இல்லை. இருக்கிறார்கள் தான் ஆனாலும் அதையும் மீறி அவர்கள் சாதனை அதிகமாக இருக்கிறது. கூனி ராமாயணத்தில் என்றால் சகுனி மகா பாரதத்தில்!

அழுகிறார்கள் என்பது அவர்கள் குற்றமல்ல, உணர்வுகள் லிம்பிக் பிரைன் ஆல் ஆளப்படுவது! அதை பெண்களுக்கு பெரிதாகவும் அடிக்கடி அவர்களின் சிந்தனை பகுதியோடு அதை இடையிடுமாறும் படைத்த கடவுளின் குற்றம். ஆண்கள் ஏன் அந்த அளவுக்கு அழவில்லை அடக்கி கொள்கிறார்கள் என்றால் அவர்களின் நினைவுகள் பெண்கள் அளவுக்கு உணர முடியாது. இது ஒரு சாதனை குணமா மக்களே? சமமாக இருந்து தைரியத்தோடு அடக்கிகொள்கிறார்கள் என்றால் சரி நீ தைரியம் மிக்கவன் என்று நான் ஒத்துக்கொள்வேன். அவர்களால் அந்த அளவுக்கு உணரவும் முடியாது ஆனால் அதிகம் உணர்ந்தவர்கள் போல தற்கொலையையும் அதிகம் செய்கிறார்கள். இது ஒன்றே போதும் ஆண்களின் மனதைரியத்தை சொல்ல!

ஆகவே இறுதியாக விஞ்ஞானம் ஆண் பெண் இருவருக்கும் மனோ சக்தி சமம் என்று சொன்னாலும் ஆண்களுக்கு மனோதைரியத்தின் உச்ச அளவை வெளிப்படுத்த அவசியம் இல்லை எனவும் அப்படியே ஏற்பட்டாலும் அவர்களின் தற்கொலை வீதங்கள் ஏனோ அதை அவர்கள் உச்ச அளவுக்கு பயன் படுத்துவது இல்லை எனவும் தான் காட்டுகின்றன.

ஆனால் பெண்ணுக்கோ இப்போதைய சூழல் சின்ன சின்ன சாதனைகளுக்கு கூட ஏகப்பட்ட மனோ தைரியம் தேவை என விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெண்களின் சாதனை வீதம் தேங்கி நிற்கவில்லை. பல்வேறு துறைகளிலும் அவர்கள் சாதித்து கொண்டே செல்கிறார்கள்! மனோ தைரியத்தை ஒப்பிடும் சூழலையும் சமூக கட்டுக்களையும் கவனத்தில் கொள்ளுமாறு தயையுடன் கேட்டுக்கொண்டு மனோதைரியம் பெண்ணாலேயே அதிகம் வெளிக்காட்டப்படுகிறது என்று அடித்து கூறி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்! ;)
  

2 comments:

  1. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete
  2. உண்மை தான் பெண்களுக்கு மனத்திடம் அதிகம்தான். ஆனால் இல்லையென்பதாய் சிறு வயது முதல் திணிக்கப்பட்டு வருவதுதான் ஆங்காங்கே நடக்கும் பிரச்சனைகளுக்குக் காரணம். வலைச்சரம் மூலம் தொடர்கிறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete